இந்தியாவில் மணவியலும் மனவியலும்
தலைப்பு மிக கடினமாக அமைந்து விட காரணம் இந்த வாரம் சென்னையில் நடந்த ஒரு கொலை சம்பவம். கொல்லப் பட்ட பார்த்தசாரதி என்னும் நபர் காதலித்து திருமணம் செய்தவர். கூலியாட்கள் கொலை செய்து உள்ளனர். பணம் கொடுத்து கூலியாட்களை ஏவி விட்டவர் காதல் மனைவியின் தந்தை. இந்த மூன்று வரிகள் போதும், ஒரு காதல் திரைக்கதையை நாம் கோடிட்ட இடத்தில் நிரப்பிக் கொள்ள.
இந்த சம்பவத்தை நாளிதழ்களில் படிக்கும் போதே மூணாறில் நடைபெற்ற, அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க இயலாத, ஒரு கொலை சம்பவம் ஞாபகத்தில் வருகிறது. புதிதாக திருமணமான ஜோடி தேனிலவுக்காக மூணாறு வந்தனர்; கணவர் கொல்ல படுகிறார்; கொன்றவர் மனைவியின் காதலன்; கடைசி வார்த்தைக்கு முன்பாக "கள்ள" என்ற வார்த்தையை சேர்த்து இருந்தன அப்போது வந்த பத்திரிக்கைகள்.
![]() |
| கொலையான அனந்தராமன் மனைவியுடன் அவருடைய கடைசி புகைப்படத்தில் |
இரண்டு பத்திகளுக்கும் ஒற்றுமை என்ன என்றால் " ஒரு காதல்; ஒரு திருமணம்; ஒரு கொலை;". காதலர்கள் விரும்பி பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்தால் பெற்றோர்கள் கொலை செய்யவும் தயங்க வில்லை என முதல் பத்தி செய்தியும், கட்டாய திருமணம் செய்தால் காதலர்கள் கொலை செய்ய தயங்க மாட்டார்கள் என்பதை இரண்டாம் பத்தி செய்தியும் தெரிவிக்கிறது.
"அந்த காலங்களில் இப்படி நடந்தது இல்லை; இதற்க்கு காரணம் இப்போதைய தலைமுறை காதல் செய்வது தான்" என்று பேருந்தில் வரும் போது ஒரு பெரியவர் சொல்லி கொண்டு இருந்தார். அது சரியா? என்பதை பற்றி நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. ஏதோ காதல் என்பது இந்த பத்து ஆண்டுகளுக்குள் மட்டுமே இந்த உலகிற்கு வந்தது போல அவரது பேச்சு இருந்தது.
கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியாவில், திருமணங்களின் வரலாறு பற்றி தெளிவாக அறிய முடிய வில்லை. பெற்றோர்கள் தனது மகளின் திருமண நாளை அறிவித்து, பல வரன்கள் வந்த பிறகு, பெண்ணோ அல்லது பெற்றோரோ மணமகனை தேர்ந்து எடுக்கும் "சுயம்வரம்" இப்போது உள்ள "அரேஞ்சுடு" திருமணங்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. ராமாயணத்தில் ராமர் சீதையை திருமணம் செய்தது இவ்வகையில் தான்.
அதற்காக இதிகாசங்களில் காதல் திருமணங்கள் இல்லை என்று ஆகி விடாது. பெற்றோருக்கும் ஊராருக்கும் தெரியாமல் மணமக்கள் மட்டும் திருமணம் செய்து கொள்வதை "கந்தர்வ விவாகம்" என்று விளக்கம் உள்ளது. துஷ்யந்தன் - சகுந்தலை என இருவர் இவ்வகை திருமணம் புரிந்ததாக கதைகள் உள்ளன.
மேலும், அசுர திருமணம், ராட்ஷஷ திருமணம் மற்றும் பைசாச திருமணம் என்கிற மூன்று வகை திருமணங்கள் மணப்பெண்ணின் விருப்பம் இல்லாமல் நடப்பவை என்றும் குறிப்பிட பட்டுள்ளது. ஆனால், எந்த வகை திருமணத்திலும் மணமகனுக்கு விருப்பம் இல்லாமல் நடைபெற வழி இல்லை.
திருமணத்தின் வகைகளில் இதிகாச காலத்திற்கும் இன்றைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; மாறி இருப்பது மனங்கள் மற்றும் விஞ்ஞான சாதனங்கள் மட்டுமே;
உண்மையில் இந்த பத்து வருடங்களில், நடந்த மாற்றம் என்னவென்றால், பெண்கள் கல்வி அறிவு பெற்றதும், கொஞ்சமாவது உரிமை பெற்றதும் மட்டுமே. சங்க காலங்களில் இருந்து, பெண்கள் ஆண்களின் தயவில் வாழ வேண்டும் என்று எழுத படாத விதி இருந்தது. அதனால், அவர்கள் யாரை மணம் புரிய வேண்டும் என்பதை அவர்களது தந்தை முடிவு செய்வார். மணம் முடிந்த பின்னர், பெண்கள் கணவர் என்ன சொன்னாலும் கீழ்ப்படிந்தால் மட்டுமே வாழ்க்கை என்ற நிலை இருந்தது. முந்தைய தலைமுறையினர் விவாகரத்து செய்யாமல் தான் வாழ்ந்தனர் என்றாலும் விரும்பிய படி வாழ்ந்தார்களா என்பது விடை அறியா கேள்வியே.
கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும், டெல்லியில் விவாகரத்து விகிதம் ஒன்பது மடங்கு அதிகரித்து உள்ளதாக ஒரு அறிக்கை உள்ளது. கொல்கத்தா மற்றும் சென்னையில் இரண்டு மடங்கு விவாகரத்து விகிதம் அதிகரித்து உள்ளதாகவும் அவ்வறிக்கை தெரிவிக்கிறது. விவாகரத்து விகிதம் அதிகரிப்பதற்கு காரணமாக நகர மயமாக்கல் மற்றும் விழிப்பு உணர்வு அதிகரித்ததும் கூறப்படுகிறது.
எனவே, தற்போதைய நிலையில், திருமணம் என்பது பெற்றோர்களுக்கும் மணமக்களும் பிடித்து செய்ய வேண்டிய ஒன்றாகிறது. "பணம் பார்த்து, மதம் பார்த்து, இனம் பார்த்து, மனம் பார்த்து வர வேண்டும் காதல்" என்ற வரிகளின் படி, காதலர்கள் தங்கள் பெற்றோருக்கும் பிடிக்கின்ற படி காதல் செய்வதும், பிள்ளைகள் காதல் செய்வதை ஏற்று கொள்ளும் பெற்றோரும் அமைந்தால் மட்டுமே வாழ்க்கை நிம்மதியாக அமையும். அப்படி இல்லா விட்டால், வாரத்துக்கு ஒரு பார்த்தசாரதியும், அனந்த ராமன்களையும் நாம் நாளிதழ்களில் சந்திப்போம்.

2 கருத்துகள்:
நல்ல பதிவு தோழரே ! ஆனால் சங்ககாலத்திலும் கூட பெண்கள் தாம் விரும்பிய கணவனோடு உடன்ப் போக்கு செய்துள்ளார்கள். அதனை அந்த சமூகம் ஏற்று தான் இருந்தது. ஏன் எனக்குத் தெரிந்து நீலகிரி பக்கத்தில இருக்க மலைவாழ் மக்களில் கூட இந்தப் பழக்கம் இருக்குதுங்க ? பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை மணப்பது, ஆணுக்கு பெண் அடங்கி இருக்கவேண்டும் என்பது எல்லாம் இடைச்செருகல் தான் என நினைக்கின்றேன்.
thank you, friend! yes, all those nonsense things are came in middle itself!!
கருத்துரையிடுக