திருப்பூர் பேருந்து விபத்து
செய்தி தொலைக்காட்சிகளில் கீழே நிற்காமல் ஓடும் தலைப்பு செய்திகளில் அவ்வப்போது தமிழ்நாட்டில் ------- அருகே விபத்து; ---- பேர் பலி; என பல நாட்கள் பார்த்த போதும், எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் அடுத்த நொடியே இசை சேனல்கள் மாற்றி "ரண்டக்க ரண்டக்க" பார்த்து இருக்கிறேன்; தமிழ்நாட்டில் விபத்து என்பது தினசரி பேப்பரில் எட்டு பக்கத்துகளுக்குள் ஏதாவது ஒரு பக்கத்தில் நிச்சயம் இருக்கும்; அதனால் விபத்து பற்றிய செய்திகளுக்கு முக்கிய துவம் கொடுத்தது இல்லை, நேற்று அந்த பேருந்து தீப்பிடித்து எரிவதை நேரில் பார்க்கும் வரை.
ஒரு பேருந்து எரிந்து எலும்புக்கூடு ஆக உள்ளதையும், கருகிய உடல்களின் பொருட்காட்சியையும் மேலே உள்ள படங்களில் நீங்கள் பார்க்கிறீர்கள். நேற்று இரவு ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஆற்காடு சென்று விட்டு, காஞ்சிபுரம் திரும்பி வரும் வழியில் இந்த பேருந்து அக்னி பிழம்பாக எரிவதையும் உள்ளே எந்த வித ஒப்பாரியும் இல்லாமல் பிணங்கள் எரிவதையும் நேரில் காண்கின்ற துரதிர்ஷ்டம் அமைந்தது.
விபத்து நடைபெற்ற இடம் வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் என்கிற இடத்தில். பொதுவாகவே, ஒரு விபத்து நடந்ததும், போலிசும் தீ அணைப்பு வீரர்களும் தாமதமாக வருவதால் மட்டுமே, இழப்பு அதிகம் ஏற்படுகிறது என்கிற ஒரு வாதம் இருந்து வருகிறது. ஆனால், நேற்று விபத்து நடந்த அடுத்த நிமிடம் தீ அணைப்பு வாகனம் வந்து இருந்தால் கூட இறந்தவர்களில் ஒருவரையாவது காப்பற்றி இருக்கலாமா என்பது சந்தேகமே! ஏனெனில், முழுவதும் எரிபொருள் நிரப்பப்பட்ட ஒரு விமானம் அணு ஆயுதத்திற்கு சமமானது என்பதை ஒசாமா அமெரிக்காவில் நிருபித்து காட்டியுள்ளார்; அதே போல இந்த விபத்திலும் எரிபொருள் டாங்கி வெடித்ததால் மட்டுமே இந்த அளவுக்கு உயிர்கள் பலி வாங்க பட்டு உள்ளன;
இந்த பேருந்து சென்னை யில் இருந்து திருப்பூர் செல்லும் தனியார் Travels பேருந்து. விபத்து நடந்த இடத்திற்கு அருகே வரும் போது முன்னால் சென்ற இரண்டு லாரிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதாகவும், அந்த லாரிகளின் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய போது, கட்டுப்பாடு இழந்த பஸ், பள்ளத்தில் பாய்ந்து, டீசல் டாங்கி வெடித்ததாக, சரணடைந்த பேருந்து ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வாகன விபத்துகளுக்கு காரணமாக வண்டிகள் பராமரிக்க படாமல் இருப்பதையும், ஓட்டுனர்களின் அலட்சிய போக்கும் தான் என்று கருத படுகிறது. இவை இரண்டுமே இந்த விபத்துக்கு காரணமாக இல்லை என்றே படுகிறது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை காலங்களிலும் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செல்ல பேருந்துகளில் இடம் கிடைக்காது. அவ்வளவு ஜன நெரிசல் இருக்கும். ஆனால் வார வேலை நாட்களில், பேருந்துகளில் கூட்டம் எதுவும் இருக்காது. எனவே, ஆட்கள் சேரும் வரை பஸ் ஸ்டாண்டில் நின்று, போதுமான அளவு ஆட்கள் ஏறிய பிறகே வண்டிகள் புறப்படுகின்றன. பஸ் ஸ்டாண்டில் நின்ற நேரத்தினை ஈடு செய்ய அதிக வேகத்தில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று எரிந்து, டீசலுக்கு பதிலாக 23 பேர்களின் உயிர் குடித்த பேருந்தும் இதே போல் தான் நின்று, ஆட்கள் சேர்த்து கொண்டு, வேகமாக சென்றுள்ளது.
தனியார் பேருந்து நிறுவனங்கள், பயணிகளிடம் இருந்து பணம் மட்டுமே பார்க்காமல், கொஞ்சம் பயணிகளின் பாதுகாப்பையும் கவனிக்க வேண்டும். வேகமாக சென்று பிணமாக போவதை விட, கொஞ்சம் நிதானம் ஆனாலும் உயிரோடு செல்வதே உத்தமம்.
மேற்படி விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்க படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது; அதே போல அதிவேகத்தில் செல்லும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்தாலும் பாராட்டத் தக்கதே. இவ்வாறு நாம் யோசிக்க, உயிர் தியாகம் செய்த பெயர் தெரியாத அந்த 23 பேரின் ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை பிரார்த்திப்போம்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக