மனதை திடப்படுத்தி கொள்ளுங்கள். இந்த பதிவில் தொடர இருப்பவை நிறைய மரணங்கள்; கொல்லும் வழிகள்; நிறைய வலிகள்.அதற்காக இளகிய மனம் படைத்தவர்கள் இதை படிக்க வேண்டாம் என்றெல்லாம் ஒதுங்கி விட வேண்டாம். கொலைகளை ரத்தமும் சதையுமாக நாம் பார்க்க போவதில்லை; தியேட்டரில் பேய் படம் பார்ப்பதை போல ஒரு கண்ணை மூடி கொண்டு, கொலைகளுக்கான காரணங்கள் மற்றும் சில சரித்திர குறிப்புகளும், ஆராய்ச்சிகளையும் மட்டுமே மற்றொரு கண்ணால் பார்க்கலாம்.
மனித இனம் தோன்றிய உடனே அரங்கேற்ற பட்டவை, கொலைகள். குரங்கிற்கு அடுத்த உயரிய உயிரனமாக தோன்றியது நமது மனித இனமும், நியாண்டர்தால் மனித இனமும்; நியாண்டர்தால் இனத்தினை முழுவதுமாக கொன்று அழித்த பின்னர் தான் மனித இனம் வளர்ந்தது என்பது வரலாறு. அது வரை விலங்குளை விலங்குகள் வேட்டையாடியது முடிந்து கொலை என்கிற வார்த்தை கண்டு பிடிக்க பட்டது.
கொலையால் வளர்ந்த இனம் என்பதாலோ என்னவோ, மனித மனங்களுக்குள் கொடூரமான கொலை எண்ணங்கள் உள்ளன.
ஒரு ஆய்வில் கண்ணாடி தடுப்புக்கு ஒருபுறம் தேர்ந்த நடிகர்கள் நிறுத்தப்பட்டு அவர்களின் தலையில் இரும்பு கவசம் பொறுத்த பட்டது. மறுபுறம் ஆய்வுக்கு வந்தவர்களின் கைகளில் கரண்ட் ஷாக் கொடுக்கும் கருவி வழங்க பட்டது. ஆய்வுக்கு வந்தவர்கள் நடிகர்களிடம் கேள்விகள் கேட்க வேண்டும். தவறாக விடை சொன்னால், அவர்களுக்கு கரண்ட் ஷாக் கொடுக்கலாம் என்று தெரிவிக்க பட்டது. உண்மையில் அங்கே கரண்ட் எதுவும் இணைக்க பட வில்லை. ஆய்வுக்கு வந்தவர்கள் கொடுக்க நினைக்கும் கரண்ட் அளவு நடிகர்களுக்கு தெரிவிக்க பட, அதற்க்கு ஏற்றார் போல் அவர்கள் வலியில் துடிப்பது போல நடிப்பார்கள். ஆய்வின் போது முதலில் மிக குறைவான அளவில் ஆரம்பித்து, நடிகர்கள் கரண்ட் ஷாக் அடிப்பதை போல நடிப்பதை பார்த்ததும் வெறியேறி மிக மிக அதிக அளவில் கரண்ட் ஷாக் கொடுத்துள்ளனர் ஆய்வுக்கு வந்த சாதாரண மக்கள். ஆய்வின் முடிவு என்ன என்றால், தங்களுக்கு தீங்கு ஏதும் நேராது என்றால், யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய மனிதர்கள் தயங்குவது இல்லை என்பதே.
"எனக்கு வரும் கனவுகளில், சமயங்களில் பெண்கள் வருகிறார்கள்; என்னை கிளர்ச்சியுற செய்கிறார்கள்;சில கனவுகளில் சிலர் என்னை தாக்க வருகிறார்கள், நான் அவர்களுடன் வன்முறையாக சண்டை போடுகிறேன்; பாதி கனவிலேயே நான் யார் என்பதை உணர்ந்து அவைகளை கை விடுகிறேன்" - இப்படி சொல்லி இருப்பவர் சாட்சாத் தலாய் லாமா. அவர் யார் என்று கேட்பவர்களை திபெத்தில் லாட்டரி விற்க வைக்கலாம். அப்பேர் பட்ட துறவிக்கே காம, குரோத எண்ணங்கள் வந்தால் சாதாரண மனிதனுக்கு எவ்வளவு வரும்? அதிகாரமும், பலமும் கொண்ட மன்னர்களுக்கு கொலை உணர்ச்சி எவ்வளவு இருந்து இருக்கும்?
மன்னராட்சி இருந்த காலங்களில் ராஜ துரோகங்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டது. முதன் முதல் மரண தண்டனை விதித்த மன்னர் யார் என்று எங்கே தேடியும் தெரிய வில்லை.
இதிகாசங்களில் ராமாயண, மகாபாரத்தில் போர்கள் நடந்ததாகவும், பல்லாயிரக் கணக்கில் உயிர்கள் கொல்ல பட்டதாகவும் வருகிறது. முறையாக வாகனம் ஓட்டாததால் ( drunk & driving ah என்று தெரிய வில்லை), மகனுக்கு மரண தண்டனை வழங்கிய மனுநீதி சோழன் பற்றிய வரலாறு பள்ளியிலேயே படித்து இருக்கிறோம்.
இந்திய அரசர்களை பொறுத்த வரை, ராஜ துரோகம் மற்றும் கடவுளை பழிப்பவர்களை மட்டும் கழுவிலேற்றி கொல்லும் வழக்கம் இருந்துள்ளது. மற்ற படி, எப்போதாவது நடை பெரும் போர்களில், அவர்களின் வன்முறை உணர்ச்சிக்கு வடிகால் இருந்துள்ளது.
இந்தியாவின் மீது முகாலய பேரரசர்கள் படை எடுத்து வந்த போது தான் கொலைகளின் வகைகள் தெரிய வந்துள்ளது. முகம்மது பின் துக்ளக் என்பவனிடம் சண்டை இட்டு தோற்ற அரசன் உடனே தனது கழுத்தை வெட்டி கொன்று விடுமாறு கெஞ்சி உள்ளான். காரணம் உயிரோடு பிடி பட்டால், அவனது சித்திரவதைகளை தாங்க முடியாது. அந்த அரசனுக்கு கிடைத்த தண்டனையை எழுதவே சற்று தயக்கமாக உள்ளது. தண்டனையை தெரிந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் அடுத்த பத்திக்கு சென்று விடவும். சண்டையில் பிடிபட்ட அரசன் உயிரோடு இருக்கும் போதே, அவனது தோல் முழுவதும் உரித்து எடுக்கப்பட்டது. எடுக்க பட்ட தோலுக்குள் வைக்கோல் அடைக்கப்பட்டு அரண்மனை வாசலில் தொங்க விட பட்டது. மேலும் அவனது உடல் கொஞ்சம் கொஞ்சமாக வெட்ட பட்டு, அந்த மாமிசம் அவனது உறவினர்களுக்கு வலுக்கட்டாயமாக வாயில் உணவாக திணிக்கப் பட்டது.
மன்னராட்சியின் முடிவில் ஆங்கிலேயர் வந்தனர். அவர்களின் சட்டத்தில் பழகி போன பழைய தூக்கு மட்டுமே இருந்தது. சுவாரசியமான கொலைகள் என்று அவர்கள் எதுவும் செய்த மாதிரி இல்லை. இந்த சமயத்தில் ஜெர்மனியின் ஹிட்லர் பற்றி ஞாபகம் வரவில்லை என்றால் அவன் செய்த 15-17 மில்லியன் கொலைகளுக்கு மதிப்பே இல்லாமல் பொய் விடும். சின்ன அறைக்குள் வேற்று மதத்தினவர் என்ற ஒரே காரணத்திற்காக அவ்வளவு யூதர்களை அடைத்து, விஷ வாயு அனுப்பி, கூட்டம் கூட்டமாக எம உலகிற்கு டிக்கெட் கிழித்து கொடுத்துள்ளான்.
இந்த கொடூரங்கள் எல்லாவற்றையும் ஏன் எழுத வேண்டி இருக்கிறது என்றால் இலங்கை இராணுவம் செய்த சில கொலைகளை இணையத்தில் பார்த்ததாலேயே.
மிருகத்தில் இருந்து அப்போது தான் தோன்றினோம், ஆதலால் நியாண்டர்தால் மனிதர்கள் கொலை செய்ய பட்டது அறியாமையிலும், அறிவு வளர்ச்சியின்மையாலும் செய்ய பட்டதாகிறது.
அரசர்கள் தங்கள் ராஜ்ஜியத்தை காப்பாற்ற செய்த கொலைகள், பதவி ஆசையில், அறிவிழந்து செய்ய பட்டவைகள் ஆகின்றன;
வேற்று மத துவேசத்தில் கொலைகள் செய்த ஹிட்லர், மீண்டும் ஒரு மிருகமாகவே வரலாற்றில் தெரிகிறான். அந்த நேரத்தில் அறிவியல் முன்னேற்றங்கள் குறிப்பிடும் படி வளர வில்லை. அதனால் மத நம்பிக்கையில் வேருன்றி, அவ்வாறு செய்து விட்டான் என்பதை நாம் சிறிது யோசிக்கலாம்.
ஆனால், எனது அறையில் இருந்து நான் எழுதும் இந்த கட்டுரையை உலகம் முழுவதும் வாசிக்கும் அளவுக்கு அறிவியல் வளர்ந்த பின்னும், பார்க்காத கடவுளுக்காக பாகிஸ்தான் இராணுவம் இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி மக்களை கொல்கிறார்கள்; இலங்கை இராணுவமோ சொந்த நாட்டு மக்களையே வேற்று மொழியான தமிழ் பேசும் ஒரே காரணத்திற்க்காக கொன்று குவிக்கிறார்கள்; அவர்கள் இன்னும் விலங்காகவே இருக்கிறார்கள்.
பலத்தால் மட்டுமே நீடித்தது மிருகங்களின் வரலாறு.அன்பால் மட்டுமே நிலைத்து இருப்பதே நாம் மனிதர்களாக வளர்ச்சி அடைந்ததற்கான சான்றாகும்.
வன்முறையை விடுத்து அவர்களும் பரிணாம வளர்ச்சி பெற்று, மனிதர்களாகட்டும்.










