இரத்தமும் தானமும்
இரத்தம், உடம்புக்குள் பாயிண்ட் டு பாயிண்ட் ஓடும் ஒரு திரவ பஸ். உடம்பு செல்களுக்கு தேவையான சத்து மற்றும் ஆக்சிஜனை சுமந்து சென்று சேர்த்து விட்டு அங்கே வெளியேற தயாராக இருக்கும் கார்பன் டை ஆக்சைடை ஏற்றி கொண்டு செல்லும் ஒரு சிவப்பு பஸ். இந்த பஸ் ஒரு மனித உடலுக்குள் 5 - 6 லிட்டர் இருக்க வேண்டும். அளவு குறையும் போது பண்டிகை நேரத்து கோயம்பேடு பஸ் நிலையம் பயணிகள் கூட்டத்தால் திணறுவது போல உடல் திணறி, அந்த உடலுக்கு சொந்தகாரர் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் கண்ணீர் அஞ்சலிக்கு கீழே புகைப்படமாக இடம்பெறுகிறார்.
அவ்வாறு ஒருவருக்கு விபத்து மூலமாகவோ, அல்லது அறுவை சிகிச்சையின் போதோ, இரத்தம் அதிகமாக வெளியேற்ற படும் போது, அதே இரத்த வகையை கொண்ட மாற்று நபர்களிடம் இருந்து கடன் பெற்று மாற்று பேருந்து விடலாம்.
சென்ற வாரம் ஒருவரின் அறுவை சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவ மனையில் இரத்த தானம் செய்து விட்டு வந்தேன். அடியேனின் ரத்த வகையான "ஏ1" நெகடிவ் என்பது ஆறாவது விரல் போல கொஞ்சம் அரிதானது; எனவே, "friendstosupport.org" என்னும் இணையதளத்தில் எனது விவரங்களை பதிவு செய்து உள்ளேன்; இந்தியாவில் எல்லா மாநிலத்தில் உள்ள தன்னார்வ இரத்த நன்கொடையாளர்களும் இந்த தளத்தில் பதிவு செய்து உள்ளதால் இரத்தம் தேவை படுபவர்கள் இந்த தளத்தில் தங்களுக்கு அருகாமையில் உள்ள டோனோர்ஸ் யை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
அவ்வையார் இன்றைக்கு இருந்து இருந்தால் "தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம்" என்று பாடி இருக்க கூடும். இந்தியாவில் தன்னார்வ நன்கொடையாளர்கள் அதிகரித்து வந்தாலும், இரத்த தானம் செய்ய தயங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே உள்ளது.
இரத்த தானம் செய்யாத பலர் கூறும் முதல் வாக்கியம் " எனக்கு அதை பார்த்தாலே மயக்கம் வந்துடும்" என்பதே. அதற்க்கு காரணம் முதல் முறை தானம் செய்யும் போது ஏற்படும் பதற்றமே. என்னுடைய முதல் இரத்த தானம் விருப்ப பட்டு நடந்தது அன்று; 18 வயதில் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் வற்புறுத்தி வெறும் 48 கிலோ எடை இருந்த என்னை இரத்த தான முகாமில் தானம் செய்ய சொன்னார்; இரத்தம் எடுக்க படும் போது அருகே ஒரு அழகான (?) மாணவி நின்று கொண்டு, என்னிடம் பேசி கொண்டு இருந்ததால் பயத்தை வெளி காட்ட முடியாமல் தவித்தது இன்றும் நினைவில் உள்ளது. கையில் இருந்து ஊசியை எடுத்து, இரத்த தானம் அவ்வளவு தான் என்று தெரிவித்த பிறகு தான் அது எளிதான ஒன்று என்பது தெரிந்தது.
இதனால் சகலருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் முதல் முறை தானம் செய்யும் போது பதட்டம் அடையாமல் மனதினை கட்டு படுத்துங்கள்; அதற்காக அழகான பெண் அருகில் இருக்க வேண்டும் என்று கேட்காதீர்கள்;
அதன் பின்னர், அடையார் கான்செர் இன்சிடியுட்டில் volunteer ஆக சேர்ந்து நம்மாளும் சிலருக்கு பயன் அளிக்க முடியும் என்று தெரிந்ததில் இருந்து, சென்ற வாரம் வரை கிட்ட தட்ட கால் சதம் இரத்த தானம் செய்தாகி விட்டது.
அதே போல நெகடிவ் இரத்த வகை கொண்ட நபர்கள் பொதுவாக முகாம்களுக்கு சென்று தானம் செய்வதை தவிர்ப்பது நன்று. அதை விட, அவசர சிகிச்சைகளுக்கு தேவை படும் போது நேரில் சென்று வழங்கி வரலாம்.
மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி துவங்கி கடைசியில் நான் வரைக்கும் இரத்த தானம் பற்றி பேசியாகி விட்டது. இந்தியாவில் இரத்த இழப்பின் காரணமாக யாருமே இறக்க வில்லை என்ற நிலை வந்திட, "செல்வோமா, சென்னை சில்க்ஸ்" என்று அனுஷ்கா கேட்பது போல, நம்மை நாமே கேட்கலாம் "செய்வோமா, இரத்த தானம்?"
